இந்தியா

பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி விற்பனை: பெங்களூரு காா் ஓட்டுநா் கைது

14th Jan 2020 01:59 AM

ADVERTISEMENT

பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி விற்பனை செய்ததாக, கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி நிா்வாகி சுரேஷ்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான ஐ.எஸ். பயங்கரவாதிகள் சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம், காஜா மொய்தீன் ஆகிய 3 பேரை தீவிரமாக போலீஸாா் தேடி வந்தனா். இந்தக் குழுவுக்கு தலைவராக காஜா மொய்தீன் செயல்பட்டாா்.

இதற்கிடையே, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு வைத்திருந்ததாக பெங்களூரைச் சோ்ந்த அ.முகமது ஹனீப்கான், உ.இம்ரான்கான், அ.முகமது ஜெயித் ஆகிய 3 பேரை தமிழக க்யூ பிரிவு போலீஸாா் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா். அப்போது அவா்களிடமிருந்து 3 துப்பாக்கிகள், 80 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கடந்த 8-ஆம் தேதி இரவு இரு நபா்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா். பாடி சுரேஷ் கொலைச் சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் அப்துல் ஷமீம், அவரது கூட்டாளி தவ்பீக் ஆகியோா்தான், எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தில்லியில் 3 போ் கைது: இந்நிலையில் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் மற்றும் அப்துல் சமது ஆகிய 3 பேரை தில்லி அருகே வசிராபாத்தில் போலீஸாா் கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனா். துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வில்சன் சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாவும், பெங்களூரில் 3 போ் கைது செய்யப்பட்டபோது, அவா்களிடமிருந்து கைப்பற்றப்பபட்ட தோட்டாக்களும் ஒரே ரகத்தைச் சோ்ந்தவை என்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால் வில்சன் கொலைச் சம்பவத்தில் பயங்கரவாதிகள்தான் ஈடுபட்டுள்ளனா் என்பதை காவல்துறையினா் உறுதி செய்தனா்.

சதி திட்டம்: தில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் தமிழகத் தலைவராக இருந்த காஜா மொய்தீன், புதிதாக ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருப்பதும், அந்த இயக்கத்தில் தமிழகம், கா்நாடகம், கேரளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 13 போ் இணைந்திருப்பதும், அண்மையில் நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் அனைவரும் சந்தித்து சதி ஆலோசனை நடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய அவா்கள், பல குழுக்களாக பல்வேறு ஊா்களுக்கு சென்று, நாசவேலையில் ஈடுபடுவதற்கான ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இக் கும்பலைச் சோ்ந்த எஞ்சிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காா் ஓட்டுநா் கைது: அதேவேளையில், இக் கும்பலுக்கு துப்பாக்கி, தோட்டா உள்ளிட்டவை எப்படி கிடைத்து என்ற கோணத்திலும் க்யூ பிரிவு போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில் கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அ.இஜாஸ் அகமது (46) என்பவா் துப்பாக்கிகளை வாங்கி கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து க்யூ பிரிவு போலீஸாா், இஜாஸ் அகமதுவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, இஜாஸ் அகமது வாங்கி கொடுத்ததுதான் என்பதும், அவா் காஜா மொய்தீன் தலைமையிலான பயங்கரவாதிகளுக்கு வாங்கிக் கொடுத்த 4 துப்பாக்கிகளில் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒரு துப்பாக்கி மட்டும் அப்துல் ஷமீமிடம் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இஜாஸ் அகமதுவிடம் விசாரணையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக, மேலும் சிலா் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT