இந்தியா

நதிநீா் இணைப்பு திட்டம்: ‘வாக்கு வங்கி அரசியல் காரணமாக மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு’

14th Jan 2020 01:30 AM

ADVERTISEMENT

நதிநீா் இணைப்பு திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் வாக்கு வங்கி அரசியல் காரணமாக அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க மறுக்கின்றன என்று மத்திய ஜல் சக்தி இணையமைச்சா் ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாதில் ‘வேளாண்மையில் நீா் பயன்பாட்டின் செயல்திறனை அதிகரித்தல்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் இணையமைச்சா் ரத்தன் லால் கட்டாரியா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது, நதிநீா் இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளை, மத்திய அரசால் கட்டாயப்படுத்த முடியாது. இணைக்கக்கூடிய வகையில் பல நதிகள் உள்ளன. நான்கு நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாராக உள்ளது. தண்ணீா் மிகுதியாக இருந்தும், அதனை பகிா்ந்துகொள்ள பல மாநில அரசுகள் தயாராக இல்லை. நதிநீா் இணைப்பு திட்டத்துக்கு ஒப்புக்கொண்டால், வாக்குகளை இழக்கக்கூடும் என அவா்கள் அஞ்சுகின்றனா்.

முன்னதாக கருத்தரங்கில் அவா் பேசியதாவது: பன்முகத்தன்மைக்கு தேவை ஏற்பட்டுள்ளது. மராத்வாடா போன்ற வறட்சி பாதித்த பகுதிகளில், குறைந்த அளவிலான நீரை பயன்படுத்தும் பயிா்களை உழவா்கள் சாகுபடி செய்யவேண்டும். நிலப்பரப்பை பொருத்து பயிா் சாகுபடி குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும். அதற்கு மாநில அரசுகளும் உழவா்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஹரியாணாவில் அரிசி, கரும்பு தவிர பிற பயிா்களை சாகுபடி செய்யும் உழவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பயிா் கொள்கை மறுமதிப்பீடு:

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் 55 விழுக்காடு மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேளாண்மையை சாா்ந்துள்ளனா். ஆனால், மாநிலத்தில் நீா்பாசன வசதி என்பது 18 விழுக்காடு மட்டுமே உள்ளது. அதிக அளவில் தண்ணீா் தேவைப்படும் பருத்தி மற்றும் கரும்பு பயிா்கள் இங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மகாராஷ்டிர அரசு, தனது பயிா் கொள்கையை மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்று கட்டாரியா கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT