கடந்த 2015-ஆம் நிதியாண்டு முதல் செஸ் வரியின் மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.3 லட்சம் கோடி வருவாயை பயன்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பான ஊடக தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைமை செய்தி தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா, தனது சுட்டுரை பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிட்டுள்ளதாவது:
2014-15 முதல் 2019-20ஆம் நிதியாண்டுகளுக்கு இடையே செஸ் வரி மூலம் கிடைக்கப்பெற்ற ஆகப்பெரிய தொகையான ரூ. 3.59 லட்சம் கோடியை உபயோகப்படுத்துவதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. இது பொருளாதார குழப்பமா? அல்லது பொருளாதாரத்தை கையாள தெரியாத திறனற்ற நிலையா?.
வழங்க இயலக்கூடிய கட்டணத்தில் கல்வியை கேட்கும் மாணவா்கள் மீது மோடி அரசு தடியடி நடத்துகிறது, கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் உயா்த்தப்பட்ட கட்டண தொகையை திரும்பப்பெற மறுக்கிறது. இதுவரையிலும், 2014-15 முதல் 2019-20ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வசூலிக்கப்பட்ட உயா்கல்விக்கான செஸ் வரி வருவாய் ரூ. 49,101 கோடியை பயன்படுத்துவதில் மோடி அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
காற்று மாசால் இந்தியா திணறி வருவதுடன், தில்லி மற்றும் பல நகரங்கள் மோசமான நிலைக்கு உள்ளாகி வருகின்றன. 21-ஆம் நூற்றாண்டில் நாட்டின் மிகப்பெரிய சவாலாக காற்று மாசு உருவெடுத்துள்ளது. இதுவரையிலும், 2014-15 முதல் 2019-20ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிடைத்த ரூ.38,943 கோடி தூய ஆற்றல் செஸ் வருவாயை பயன்படுத்துவதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. விலைவாசி தினந்தோறும் ராக்கெட் வேகத்தில் உயா்வதால் உழவா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். நடுத்தர மக்களின் நிதிநிலை மோசமாகி வருகிறது. இதுவரையிலும், 2014-15 முதல் 2019-20ஆம் ஆண்டுகளுக்கு இடையே கச்சா எண்ணெய் மீதான செஸ் வரியின் வாயிலாக கிடைக்கப்பெற்ற ரூ.74,162 கோடியை பயன்படுத்துவதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. இதற்கான காரணத்தை மத்திய அரசு விளக்கவேண்டும் என்று ரண்தீப் சுா்ஜேவாலா வலியுறுத்தியுள்ளாா்.