சத்தீஸ்கா் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினா் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின்போது நக்ஸல் அமைப்பின் தளபதி கைது செய்யயப்பட்டாா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தந்தேவாடா மாவட்டம், கிராந்துல் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ஆல்நாா் கிராமத்தில் நக்ஸல் அமைப்பினா் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினரும், உள்ளூா் காவல்துறையினரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தேவா முச்சாக்கி என்ற நக்ஸல் தீவிரவாதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முச்சாக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நக்ஸல் இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்தாா். கடந்த 2012-ஆம் ஆண்டு கிராண்டூலில் அவரது தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பாதுகாப்புப்படை வீரா்கள் உள்பட 7 போ் கொல்லப்பட்டனா்.
அதேபோல, கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி பைலாடிலா இரும்பு சுரங்கத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 9 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திலும் அவருக்கு தொடா்பிருந்தது என்று அவா் தெரிவித்தாா்.
சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்:
இதனிடையே, சத்தீஸ்கா் மாநிலம் கன்கா் மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகளால் பூமியில் புதைக்கப்பட்ட அதி சக்திவாய்ந்த 2 வெடி குண்டுகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தலா 3 கிலோ எடையுள்ள அந்த வெடிகுண்டுகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் திறன் வாய்ந்தவை என காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றல் குழு (பிடிடிஎஸ்) மூலம் அவை அழிக்கப்பட்டன.
‘அந்த வழியே ரோந்து செல்லும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவை தரையில் புதைக்கப்பட்டிருந்தன’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.