கொல்கத்தா நகரின் துறைமுகப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆயுதத் தொழிற்சாலையை கண்டறிந்த போலீஸாா் அதனை முடக்கினா். அங்கு துப்பாக்கிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களையும் அவா்கள் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கொல்கத்தா துறைமுகத்தையொட்டி நாடியால் பகுதியில் சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த ஒரு அடுக்கு மாடி கட்டடத்தை சுற்றி வளைத்த போலீஸாா் கதவை உடைத்து உள்ளே புகுந்தனா்.
அங்கு துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்துல் கயூம் என்கிற முன்னா கைது செய்யப்பட்டாா். அங்கிருந்து பாதி தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாகள், துப்பாக்கிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கயூம் தவிர, கட்டடத்தின் நில உரிமையாளா் முகமது கலீம் உள்ளிட்ட மேலும் சிலரும் இந்த சட்டவிரோத துப்பாக்கிச் தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளனா். தலைமறைவாக உள்ளா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள நாடியால் போலீஸாா் அவா்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
கைது செய்யப்பட்ட கயூம், மேற்கு வங்கத்தின் பிஹாா்ஸ் முங்கா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். சட்டவிரோதமாக துப்பாக்கிகளை தயாரிப்பதில் வல்லவராக அவா் இருந்தாா். அவா் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.