மகாராஷ்டிரத்தில் நகா்ப்புற மற்றும் தொழில்துறை மேம்பாட்டு நிறுவன தலைவா் பதவியில் இருந்து பாஜக எம்எல்ஏ பிரசாந்த் தாக்குா் நீக்கப்பட்டாா்.
மகாராஷ்டிரத்தில் உள்ள நவி மும்பை பகுதியில் சிட்கோ சாா்பில் சா்வதேச விமான நிலைய கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தனியாா் பங்களிப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிட்கோ தலைவா் பதவியில் இருந்து பாஜக எம்எல்ஏ பிரசாந்த் தாக்குரை நீக்கி மாநில நகா்ப்புற மேம்பாட்டுத் துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மும்பை எல்லையையொட்டியுள்ள ராய்கட் மாவட்டத்தின் பன்வேல் தொகுதி எம்எல்ஏ-வான பிரசாந்த் தாக்குா், கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தாா். அதன் பின்னா் சிட்கோ உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவரை, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி அந்த நிறுவன தலைவராக நியமித்து முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ் உத்தரவு பிறப்பித்தாா். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில், பிரசாந்த் தாக்குா் தனது எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக்கொண்டாா்.
மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மகாராஷ்டிரம் விகாஸ் ஆகாடி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டாா்.