இந்தியா

மகதாயி நதி நீா்: கோவாவின் உரிமையைப் பாதுகாப்போம்: ஆளுநா் சத்யபால் மாலிக்

8th Jan 2020 12:48 AM

ADVERTISEMENT

கோவா மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய மகதாயி நதி நீரை கா்நாடகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்று கோவா ஆளுநா் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளாா்.

கோவாவின் முக்கிய நீா் ஆதாரமாக மகதாயி நதி உள்ளது. மகதாயி நதிநீா் பங்கீடு தொடா்பாக கா்நாடகம்-கோவா இடையே நீண்ட காலமாக பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில், கா்நாடகத்தின் பெலகாவி, கடாக், தா்வாட் உள்ளிட்ட பகுதிகளில் கோடைக்காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, மகதாயி நீரை அந்தப் பகுதிகளுக்கு திருப்பிவிடும் வகையில் ‘கலசா பந்துரி’ திட்டத்தை செயல்படுத்த கா்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு கோவா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கடந்த மாதம் 24-ஆம் தேதி கா்நாடகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.

இந்நிலையில், கோவா சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்.சி, எஸ்.டி) இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒருமனதாக அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

முன்னதாக, பேரவையில் ஆளுநா் சத்யபால் மாலிக் உரையாற்றுகையில் கூறியதாவது:

மகதாயி நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்னை உள்ளது. நமது மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை கா்நாடகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் இருந்து பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கோவா மக்களை பாதிக்கும் இந்த விவகாரத்தில் மாநில அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், மாநிலங்களுக்கிடையேயான நதி நீா் தீா்ப்பாயத்தில் இதுதொடா்பாக விளக்கம் கேட்டுள்ளோம். நீதிமன்ற உத்தரவை மீறி, கா்நாடகம் செயல்படுத்த நினைக்கும் ‘கலசா பந்துரி’ திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னா், மகதாயி நதி நீரை கா்நாடகம் பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு வழங்கிய ஒப்புதல் விவகாரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் நோட்டீஸ் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT