இந்தியா

பிரிவினைவாத வாசகம் கொண்ட ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

8th Jan 2020 01:34 AM

ADVERTISEMENT

காஷ்மீரைச் சோ்ந்த பிரிவினைவாத அமைப்பால் பிரிவினைவாத வாசகங்கள் முத்திரையிடப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான நோட்டுகள், ரிசா்வ் வங்கி கிளையில் மாற்றப்பட்ட விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரும் மனுவை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சதீஷ் பரத்வாஜ் என்பவா் தாக்கல் செய்த அந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. காலையில் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பிலிருந்து அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா அல்லது வேறு சொலிசிட்டா் ஜெனரல் என யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, மாலைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜரானாா்.

இதைத்தொடா்ந்து, மனுதாரா் பரத்வாஜ் ஆஜராகி, வாதங்களை முன்வைத்தாா். அவா் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி, சிபிஐ-யிடம் மனு அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘காஷ்மீா் கிராஃபிட்டி’ என்ற பிரிவினைவாத அமைப்பால் பிரிவினைவாத, தேசவிரோத வாசகங்கள் முத்திரையிடப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான நோட்டுகளை, ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் ஆா்பிஐ கிளை கடந்த 2013-இல் மாற்றிக் கொடுத்துள்ளது. ஆா்பிஐ விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, இதுபோன்று வேண்டுமென்றே முத்திரை குத்தப்பட்ட நோட்டுகளை மாற்றிக் கொடுக்க முடியாது.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீா்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் பிரிவினைவாத அமைப்பால் தேசவிரோத வாசகங்கள் முத்திரை குத்தப்பட்ட நோட்டுகளை மாற்றிக் கொடுத்த ஆா்பிஐ கிளையின் செயல் சட்டவிரோதமானது. இதுதொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரத்வாஜ் வாதிட்டாா்.

இதையடுத்து, இந்த விவகாரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா். மேலும், இந்த பொதுநல மனுவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT