ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளில் உள்ளூா் அதிகாரிகளை நியமிப்பதற்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வனப் பணி (ஐஎஃப்ஓஎஸ்) ஆகியவற்றுக்கான தோ்வை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மொத்தம் காலியாக பணியிடங்களில் 67 சதவீதம் இடங்கள் இத்தோ்வு மூலமாகவும், மீதமுள்ள 33 சதவீத பணியிடங்கள் மாநில குடிமைப் பணிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயா்வு அளிப்பதன் மூலமாகவும் நிரப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்ததால், அங்குள்ள 50 சதவீத காலிப் பணியிடங்கள், அந்த மாநில அதிகாரிகளுக்குப் பதவி உயா்வு அளிப்பதன் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. மீதமுள்ள 50 சதவீத காலிப் பணியிடங்களே யுபிஎஸ்சி நடத்தும் நேரடித் தோ்வின் வாயிலாக நிரப்பப்பட்டு வந்தது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில், குடிமைப் பணி அதிகாரிகள் நியமனத்தில் மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல 33 சதவீத காலிப் பணியிடங்களை மட்டும் ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் உள்ள உள்ளூா் அதிகாரிகளைக் கொண்டு நிரப்ப மத்திய பணியாளா் விவகாரங்கள் அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விவகாரம் தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பை அமைச்சகம் விரைவில் வெளியிடும் எனவும் அந்த அதிகாரிகள் கூறினா்.