இந்தியா

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராட்டத்தில் கலந்துகொள்ளலாம்: தீபிகா படுகோனுக்கு ஜாவடேகர் ஆதரவு

8th Jan 2020 08:44 PM

ADVERTISEMENT

புதுதில்லி: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராட்டத்தில் கலந்துகொள்ளலாம், கருத்தும் தெரிவிக்கலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். 

ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் நேரில் சென்று ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. 

தீபிகா நடித்துள்ள சபாக் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அவரது திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக #BoycottDeepika ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காகி வருகின்றன. 

இதனிடையே, தீபிகா படுகோன் நேரில் சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், திரைப்படக் கலைஞர்கள் மட்டுமல்ல, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராட்டத்தில் கலந்துகொள்ளவும், அவர்களது கருத்தைத் தெரிவிக்க உரிமை உள்ளது. இதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

படுகோனின் படத்தைப் புறக்கணிக்குமாறு சில பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்தது குறித்துக் கேட்டதற்கு, ஜவடேகர் அவற்றைப் படிக்கவில்லை என்றும், தனது அறிக்கையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டவே  முற்பட்டதாகவும், தாம் ஓர் அமைச்சராகவும் வழக்கமான பாஜக செய்தித் தொடர்பாளராகவுமே இருப்பதாகக் கூறினார்.

ஜேஎன்யு மாணவர்கள் விஷயத்தில் தீபிகா படுகோன் தன் ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது குறித்து பலரும் பாராட்டியும், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆதரவாகப் பேசியிருப்பதற்குப் பரவலாக ஆதரவு கிடைத்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT