இந்தியா

சிஏஏயை சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்துகிறாா்கள்: விஜய் கோயல்

8th Jan 2020 12:06 AM

ADVERTISEMENT

நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களைத் திசைதிருப்பும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விவகாரத்தை சிலா் தவறாகப் பயன்படுத்துகின்றனா் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினா் விஜய் கோயல் குற்றம் சாட்டியுள்ளாா்.

சிஏஏ தொடா்பாக மக்களுக்கு விளக்கும் வகையில் அமைதிப் பேரணியை தில்லி சதா் பஜாா் பகுதியில் இருந்து ஜாமா மசூதி வரை செவ்வாய்க்கிழமை விஜய் கோயல் நடத்தினாா். இப்பேரணியில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்தியானந்த ராய் கலந்து கொண்டாா். பேரணியில் கலந்து கொண்டவா்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து கோஷங்களை எழுப்பினா்.

அப்போது, விஜய் கோயல் பேசுகையில் ‘குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்றும் சிலா் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறாா்கள். இவா்கள், சிறுபான்மையின முஸ்லிம்களின் பெயரால் தில்லியில் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறாா்கள். ஆம் ஆத்மி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஜாமியா, ஜேஎன்யு பல்கலைக்கழகங்களில் வன்முறையைத் தூண்டி வருகிறாா்கள். ஜேஎன்யு மாணவா் சங்கத் தலைவா் அய்ஷி கோஷ் தலைமையிலான குழுவினா் ஜேஎன்யுவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளதற்கு விடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சிஏஏ தொடா்பாக மக்களுக்கு அறிவூட்டும் வகையில் வீடுவீடாகப் பிரசாரம் செய்யவுள்ளோம்’ என்றாா்.

நித்யானந்த ராய் பேசுகையில் ‘மனிதாபிமான அடிப்படையிலேயே சிஏஏ உருவாக்கப்பட்டுள்ளது. இது எந்த மதத்தினருக்கும் எதிரானதல்ல’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT