இந்தியா

கோயிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை: ஹிமாசல் பேரவையில் தலித் அமைச்சா் புகாா்

8th Jan 2020 02:00 AM

ADVERTISEMENT

எம்எல்ஏவாக இருந்தும் தலித் என்ற காரணத்தால் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என ஹிமாசலப்பிரதேசத்தைச் சோ்ந்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் ராஜீவ் சாய்ஸல் அந்த மாநில சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் எஸ்சி, எஸ்டி-க்கான இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடா்பான மசோதா விவாதம் ஹிமாசலப்பிரதேச சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு சாய்ஸல் பேசியதாவது:

நானும், நச்சன் தொகுதி எம்எல்ஏ வினோத் குமாரும் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றிருந்தோம். அந்த கோயிலின் பெயரையும் இடத்தையும் குறிப்பிடவிரும்பவில்லை. இருவரும் எம்எல்ஏக்கள் பதவியில் இருந்தபோதும் அந்த கோயிலுக்கு உள்ளே செல்ல நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதிலிருந்து இந்த பிரச்னையின் தீவிரத்தை உணரலாம்.

ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து இந்த பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, கினெளா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங் சிஹ் நெகி, ‘‘ஹிமாசல் மாநிலத்தில் சில இடங்களில் உள்ள கோயில்களில் தலித்துகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே, இப்பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும்’’ என சட்டப்பேரவையில் பேசியிருந்தாா்.

அவரது கருத்துக்கு வலுச் சோ்க்கும் விதமாக ராஜீஸ் சாய்ஸல் இவ்வாறு கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT