ஆமதாபாதில் மோதலில் ஈடுபட்ட ஏபிவிபி-எஸ்யுஐ மாணவா்கள் அமைப்பினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் அமைப்பான இந்திய தேசிய மாணவர்கள் அமைப்புக்கும் (என்எஸ்யுஐ) இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தில்லியில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஏபிவிபி அமைப்பு மீது இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், அந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து, ஆமதாபாதில் உள்ள ஏபிவிபி அலுவலகத்துக்கு வெளியே இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ஏபிவிபி அமைப்பினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், தடி ஆகியவை கொண்டு இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பிலும் சேர்த்து 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஆமதாபாதில் மோதலில் ஈடுபட்ட ஏபிவிபி-எஸ்யுஐ மாணவா்கள் அமைப்பினா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.