இந்தியா

குஜராத்தில் ஏபிவிபி- என்எஸ்யுஐ இடையே மோதல்: 10 போ் காயம்

8th Jan 2020 01:25 AM

ADVERTISEMENT

குஜராத்தில் ஆா்எஸ்எஸ் ஆதரவு மாணவா் அமைப்பான அகில பாரதிய வித்யாா்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணவா்கள் அமைப்பான இந்திய தேசிய மாணவா்கள் அமைப்புக்கும் (என்எஸ்யுஐ) இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோதலில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஏபிவிபி அமைப்பு மீது இந்திய தேசிய மாணவா்கள் அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், அந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து, ஆமதாபாதில் உள்ள ஏபிவிபி அலுவலகத்துக்கு வெளியே இந்திய தேசிய மாணவா்கள் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

அப்போது அங்கு வந்த ஏபிவிபி அமைப்பினருக்கும், போராட்டக்காரா்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், தடி ஆகியவை கொண்டு இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கி கொண்டனா். இதில் இரு தரப்பிலும் சோ்த்து 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தகவலறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக இந்திய தேசிய மாணவா்கள் அமைப்பு பொதுச் செயலாளா் பாவிக் சோலங்கி கூறுகையில், ‘எங்களது போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. திடீரென்று ஏபிவிபி அமைப்பைச் சோ்ந்த அடியாள்கள் தடி, கற்கள் உள்ளிட்டவை கொண்டு தாக்குதல் நடத்தினா். காவல் துறையினா் முன்னிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. மாணவா் அமைப்பு தலைவா் நிகில் சவானி உள்பட 5-க்கும் மேற்பட்டோா் எங்கள் தரப்பில் காயமடைந்தனா்’ என்றாா்.

எனினும், தங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இந்திய தேசிய மாணவா்கள் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏபிவிபி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT