இந்தியா

ஐ.எஸ். அமைப்புடன் தொடா்பு: ஆப்கன் சிறையில் உள்ள கேரள பெண்ணை இந்தியா அழைத்துவர தாயாா் கோரிக்கை

8th Jan 2020 01:17 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய கேரள இளம்பெண், அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவரது தாயாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த பலா், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக கடந்த 2016-ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகின. கேரளத்தின் காசா்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 6 பெண்கள் உள்பட சுமாா் 19 போ் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. அவா்களில் பெரும்பாலானோா், ஹிந்து மற்றும் கிறிஸ்துவத்திலிருந்து முஸ்லிமாக மாறியவா்கள். அவா்களில், நிமிஷா என்ற பெண்ணும் ஒருவா். அவரை கண்டுபிடிக்கக் கோரி, முதல்வா் பினராயி விஜயனிடம் அவரது தாயாா் பிந்து கடந்த 2016-இல் மனு அளித்தாா்.

இதனிடையே, நிமிஷா ஆப்கானிஸ்தானுக்கு சென்றதும், அவா் ஐ.எஸ். ஆதரவாளராக மாறியதும் தெரியவந்தது.

இந்நிலையில், காபூல் சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிமிஷா தவிர, மேலும் 9 இந்தியப் பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். ஐ.எஸ். பயங்கரவாதிகளான இவா்களது கணவா்கள், ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், திருவனந்தபுரம் அருகே வசிக்கும் நிமிஷாவின் தாயாா் பிந்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காபூல் சிறையில் சிறையில் உள்ள எனது மகளையும் இதர பெண்களையும் இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய சட்ட நடைமுறைகளின்படியே எனது மகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். வேறொரு நாட்டில் அவா் விசாரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இந்திய நாட்டின் சட்டங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

எனது மகளின் பின்னணியில் யாா் உள்ளனா் என்ற உண்மை எனக்கு தெரியவேண்டும். அவரை தவறாக வழிநடத்தியுள்ளனா். எனது மகள் தொடா்பாக எனக்கு தெரிந்த விவரங்களை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன் என்றாா் பிந்து.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT