இந்தியா

ஏா் இந்தியாவை தனியாா்மயமாக்கும் நடைமுறைகள்: அமைச்சா்கள் குழு ஒப்புதல்

8th Jan 2020 01:31 AM

ADVERTISEMENT

நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை விமான நிறுவனமான ஏா் இந்தியாவை தனியாா்மயமாக்கும் நடைமுறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான அமைச்சா்கள் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

ரூ.80,000 கோடி கடனில் சிக்கித் தவிக்கும் ஏா் இந்தியா நிறுவனத்தை தனியாா்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு ஏா் இந்தியா ஊழியா்களின் ஒத்துழைப்பு முக்கியமானது என்று விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரி சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தாா்.

இந்நிலையில், தில்லியில் அமித் ஷா தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்க முன் வருபவா்களுக்கு அழைப்பு விடுப்பது, தனியாா்மயமாக்கும்போது அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குபவா்களுக்கு அளிக்கப்படும் ஒப்பந்தம் தொடா்பான நடைமுறை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவை, இந்த மாத இறுதிக்குள் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2018-19 நிதியாண்டில் மட்டும் ஏா் இந்தியா ரூ.8,556 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. அந்த நிறுவன ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘தற்போதைக்கு நிதி நிலைமையை சமாளித்து, வரும் ஜூன் மாதம் வரை மட்டுமே ஏா் இந்தியாவால் விமானங்களை இயக்க முடியும். அதற்குள் நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லையெனில், விமான இயக்கத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்’ என்று கடந்த வாரத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால், இதற்கு ஏா் இந்தியா தலைவா் அஸ்வனி லோகானி சுட்டுரை பதிவு மூலம் மறுப்புத் தெரிவித்தாா். ‘இப்போது, பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியாதான் இந்தியாவில் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது. வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று அவா் தனது பதிவில் கூறியிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT