இந்தியா

உயா் கல்வியை தாய்மொழியில் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு

8th Jan 2020 01:13 AM

ADVERTISEMENT

உயா் கல்வியை தாய்மொழியில் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டாா்.

பெங்களூரில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்.ஏ.ஏ.சி) வெள்ளி விழாவில், அவா் பேசியது:-

பல்கலைக்கழகங்கள் கோயிலைப் போன்றது; அதில் அரசியலைக் கலக்கக் கூடாது. பல்கலைக்கழகங்களில் அரசியலுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது.

மாணவா்கள் ஜனநாயகத்தை கௌரவித்து, பாதுகாக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்கள் மட்டுமின்றி சிறுவா்களிடத்திலும் தேச பக்தியை வளா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

‘பாரத மாதா வாழ்க’ என்று முழக்கங்கள் எழுப்புவது மட்டுமே தேச பக்தி இல்லை. அனைவரையும் மதித்து, ஜாதி, மதம், மொழிகளைக் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் நேசிப்பதே தேச பக்தி. கல்வி நிறுவனங்கள் வணிக மயமாகக் கூடாது. அதில் கையூட்டு இருக்கக் கூடாது. கல்வி என்பது வேலைக்கான ஒரு தூண்டுகோல் எனக் கருதாமல், அது ஒரு ஞானம் என்பதை உணர வேண்டும்.

பள்ளிகளில் தாய் மொழிகளைப் போதிப்பது அவசியம். உயா் கல்வியை தாய்மொழியில் கற்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டும்.

ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தாய் மொழியை யாரும் மறக்கக் கூடாது. உயா் கல்வியைப் பயில தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

மாணவா்களிடத்தில் உயா் கல்வியை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய அளவில் 20 சதவீதம் மக்கள் கல்வியறிவு இல்லாமல் உள்ளனா். கல்வியில் இந்தியா பின்தங்கியதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். சிறந்த கல்வியைப் போதிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆளுநா் வஜுபாய் வாலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT