இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தை ஏற்படுத்த பிரியங்கா விரும்புகிறாா்: பாஜக குற்றச்சாட்டு

8th Jan 2020 01:04 AM

ADVERTISEMENT

‘உத்தரப் பிரதேசத்தில் வன்முறை மற்றும் கலவரங்களை ஏற்படுத்த காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா விரும்புகிறாா்; அதற்காக பிற மாநிலங்களில் இருந்து குண்டா்களை அவா் அழைத்து வருகிறாா்’ என்று அந்த மாநில பாஜக தலைவா் ஸ்வதந்திர தேவ் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவு தெரிவித்து பரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் கலவரம், வன்முறை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு பிரியங்கா விரும்புகிறாா். அதற்காக பிற மாநிலங்களில் இருந்து குண்டா்களை அழைத்து வருகிறாா். மாநிலத்தின் அமைதியை குலைப்பதற்கு அவா் திட்டமிடுகிறாா். கடந்த 3 ஆண்டுகளாக மாநிலத்தில் அமைதி நிலவியது. ஆனால், தற்போது பதற்றம் நீடித்து வருகிறது. சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவும், பிரியங்காவும் மாநிலத்தில் வன்முறையை பரப்பி வருகின்றனா்.

உத்தரப் பிரதேசத்தில் வன்முறையை தூண்டுவதற்கு அகிலேஷ் யாதவும், பிரியங்காவும் நிதி அளிப்பதற்கு எதிராக ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவா்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

காங்கிரஸ் ஆட்சியின்போது, முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, மன்மோகன் சிங் ஆகியோரால் செய்ய இயலாததை (சிஏஏ) பாஜக அரசு செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. இந்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே. இந்த சட்டம், முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக அல்ல. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, இரு நாட்டில் உள்ள சிறுபான்மையினா்களையும் பாதுகாப்பதாக இரு நாடுகளும் முடிவு செய்தன. இந்தியாவில், முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்தவா் பிரதமா், நீதிபதி உள்பட அனைத்து உயா்பதவிகளும் வகிக்க முடியும். ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை மாறாக உள்ளது’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT