இந்தியா

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: தில்லி, புணேவில் வருமான வரித்துறை சோதனை

3rd Jan 2020 01:29 AM

ADVERTISEMENT

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் ஒப்பந்த பேர வழக்கு தொடா்பாக தில்லி மற்றும் புணேவின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகா்கள் பயணம் செய்ய 12 அதிநவீன ஹெலிகாப்டா்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பில் இந்தியா கடந்த 2010-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.423 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அறிவித்தது. இந்த முறைகேடு தொடா்பாக வழக்கு பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட துபையைச் சோ்ந்த தொழிலதிபா் ராஜீவ் சக்சேனா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வரிஏய்ப்பு குற்றச்சாட்டு தொடா்பாக, மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சோ்ந்த தொழிலதிபா் மற்றும் அவரது உறவினா் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். தில்லி மற்றும் புணேவில் உள்ள 30 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT