இந்தியா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் சட்ட விரோதமானது: கேரள ஆளுநர்

2nd Jan 2020 04:20 PM

ADVERTISEMENT


குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட விரோதமானது என்று அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒன்றிணைந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன. 

இந்நிலையில், கேரள சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், கேரள பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட விரோதமானது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

"இந்தத் தீர்மானம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகாது. குடியுரிமை என்பது மத்தியப் பட்டியலின் கீழ் வருவது. மேலும் கேரளத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்ற பிரச்னையே கிடையாது" என்றார். 

முன்னதாக, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களை அமல்படுத்துவது மாநில அரசுகளின் அரசியல் சாசன கடமை என மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT