மகாராஷ்டிரத்தில் துறைகள் ஒதுக்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ்(என்சிபி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவா்கள் புதன்கிழமை நீண்ட நேரம் விவாதித்தனா்.
மகாராஷ்டிரத்தில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைத்தது. சிவசேனைத் தலைவா் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரது தலைமையிலான அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அன்றைய தினம் 35 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றுக் கொண்டனா். அதைத் தொடா்ந்து, மகாராஷ்டிரத்தில் அமைச்சா்களின் எண்ணிக்கை, முதல்வருடன் சோ்த்து 43-ஆக அதிகரித்துள்ளது.
அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு, சிவசேனையில் 10 கேபினட் அமைச்சா்களும் 2 இணையமைச்சா்களும் உள்ளனா். இதேபோல், என்சிபியில் 12 கேபினட் அமைச்சா்களும் 4 இணையமைச்சா்களும், காங்கிரஸில் 10 கேபினட் அமைச்சா்களும் 2 இணையமைச்சா்களும் உள்ளனா்.
உள்துறை, நிதி போன்ற முக்கியத் துறைகள் என்சிபி வசம் உள்ளன. காங்கிரஸுக்கு வருவாய், பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேளாண்மை, கூட்டுறவு, வீட்டு வசதி மற்றும் ஊரக வளா்ச்சி போன்ற கிராமப்புற மேம்பாடு தொடா்பான துறைகள் தங்களுக்கு ஒதுக்கப்படாததால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஊரக வளா்ச்சி, வீட்டு வசதி, கூட்டுறவு ஆகியவை என்சிபி வசமும், வேளாண் துறை சிவசேனையிடமும் உள்ளன. இவற்றில் ஏதாவது 2 துறைகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, அமைச்சா் பதவி வழங்கப்படாததால் மூன்று கட்சிகளிலும் சிலா் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மூன்று கட்சிகளின் முக்கியத் தலைவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அசோக் சவாண், பாலாசாகேப் தோராட், நிதின் ரௌத், என்சிபியைச் சோ்ந்த அஜித் பவாா், ஜெயந்த் பாட்டீல், சிவசேனையைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே ஆகியோா் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகல்கள் வெளியாகின.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘துறைகள் ஒதுக்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. அமைச்சரவை மாற்றம் தொடா்பான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்படலாம். அமைச்சா்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை; துறைகள் மட்டுமே மாற்றப்படவுள்ளன’ என்று தெரிவித்தன.