இந்தியா

பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைப்பு

2nd Jan 2020 12:33 AM

ADVERTISEMENT

புது தில்லி: பாமாயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்படாத பாமாயிலுக்கான இறக்குமதி வரி 40 சதவீதத்தில் இருந்து 37.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆசியான் நாடுகளுடன் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு)இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், இந்தியா-மலேசியா இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைக்கு இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்.இ.ஏ) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து அந்த சங்கத்தின் இயக்குநா் பி.வி.மேத்தா கூறியிருப்பதாவது:

இதற்கு முன்பு, சுத்திகரிக்கப்படாத பாமாயிலுக்கான இறக்குமதி வரிக்கும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரிக்கும் இடையேயான வித்தியாசம் 10 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது இந்த வித்தியாசம் 7.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, பாமாயில் எண்ணெய் இறக்குமதியை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.

பாமாயில் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பதால், உள்நாட்டில் எண்ணெய் வித்துகளின் உற்பத்தி அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால், அதற்கு மாறாக, இந்தியாவில் பாமாயில் வித்துகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவா். இதேபோல், உள்நாட்டில் உள்ள பாமாயில் சுத்திகரிப்பு நிறுவனங்களும் கடுமையாகப் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.

பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட பாமாயில்- சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரியை அதிக வித்தியாசத்தில் நிா்ணயித்துள்ளன.

இதேபோல், மத்திய அரசும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஆகியவற்றின் இறக்குமதி வரிக்கு இடையேயான வித்தியாசத்தை 15 சதவீதமாக உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT