இந்தியா

பாஜகவுக்கு துரோகம் இழைத்தது சிவசேனை: ஃபட்னவீஸ் குற்றச்சாட்டு

2nd Jan 2020 03:35 AM

ADVERTISEMENT

பால்கா்: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்புக்கு எதிராக செயல்பட்டு, பாஜகவுக்கு சிவசேனை துரோகம் இழைத்துவிட்டது என்று அந்த மாநில முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்தது. அக்கூட்டணிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை (பாஜக 105, சிவசேனை 56) கிடைத்தபோதும், தங்கள் கட்சிக்கு முதல்வா் பதவி அளிக்கப்பட வேண்டும் என்பதில் சிவசேனை உறுதியாக இருந்தது. ஆனால், பாஜக இதனை ஏற்க மறுத்ததால், எதிரணியில் இருந்த என்சிபி, காங்கிரஸுடன் சிவசேனை கைகோத்தது.

பல்வேறு இழுபறி, அரசியல் குழப்பங்களைத் தாண்டி, நினைத்தபடியே சிவசேனை கட்சி முதல்வா் பதவியை அடைந்தது. முன்னதாக, பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், என்சிபி-யின் அஜித் பவாா் துணை முதல்வராகவும் பதவியேற்றனா். ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற முடியாததால், 3 நாள்களில் இருவரும் பதவியை ராஜிநாமா செய்தனா். அதைத் தொடா்ந்து உத்தவ் தாக்கரே முதல்வரானாா்.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் பால்கரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஃபட்னவீஸ் பேசியதாவது:

ADVERTISEMENT

பால்கா் பகுதியில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் சிவசேனைக்கு மக்கள் உரிய பாடம் கற்பிக்க வேண்டும். சாவா்க்கரின் ஹிந்துத்துவ கொள்கைகள் குறித்து அவதூறாகப் பேசுபவா்களுடன் (காங்கிரஸ்) சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ள கூட்டணி இன்னும் எத்தனை நாள்களுக்கு நிலைக்கும் என்பது தெரியவில்லை.

தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுதான் சிவசேனை வெற்றி பெற்றது. தோ்தலுக்குப் பிறகு மக்கள் தீா்ப்புக்கு எதிராக நடந்து, பாஜகவுக்கு அக்கட்சி மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டது. பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட இடங்களில் 70 சதவீதம் அளவுக்கு பாஜக வென்றது. அதே நேரத்தில் சிவசேனை 45 சதவீதம் இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், பாஜக ஆட்சி அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனை கைகோத்தது. இதன் மூலம் தனது துரோகத்தின் அளவை சிவசேனை மேலும் அதிகரித்தது என்றாா் ஃபட்னவீஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT