இந்தியா

தில்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: 5 மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்கள் மூடல்

2nd Jan 2020 12:52 AM

ADVERTISEMENT

புது தில்லி: 2020 ஆங்கில புத்தாண்டைக் கொண்டாட இந்தியா கேட், கனாட் பிளேஸ் ஆகிய பகுதிகளுக்கு தில்லிவாசிகள் பெருமளவில் கூடியதால் செவ்வாய்க்கிழமை இரவும், புதன்கிழமையும் தில்லியின் பல்வேறு முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலை மோதியதால் 5 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன.

தில்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்கள் குறித்து தில்லி போக்குவரத்து போலீஸாா் அவ்வப்போது டுவிட்டா் சமூக ஊடகத்தில் எச்சரித்து வருகின்றனா்.

இந்நிலையில், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தில்லியின் சுற்றுலாத் தலங்களான இந்தியா கேட், கனாட் பிளேஸ் ஆகிய இடங்களில் மக்கள் குவிந்தனா். ஏராளமானோா் வாகனங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் இந்த இடங்களுக்கு புதன்கிழமை வந்தனா். இதனால் இந்தியா கேட், கனாட் பிளேஸ், ஐடிஓ ஆகிய பகுதிகளை இணைக்கும் அனைத்து முக்கிய சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான சாலைகளில் நீண்ட தூரம் வாகனங்கள் காத்திருந்தன. ஆமை வேகத்தில் வாகனங்கள் சென்ால் புத்தாண்டைக் கொண்டாட சென்றவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதேபோல், பொதுப் போக்குவரத்தான மெட்ரோ ரயில் மூலம் வந்தவா்களும் சிரமத்துக்கு உள்ளாகினா். கூட்ட நெரிசலால் சென்ட்ரல் செக்ரடேரியட், உத்யோக் பவன், பிரகதி மைதான், கான் மாா்க்கெட், மண்டி ஹவுல் ஆகிய ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன. இதனால் ரயில்களில் இருந்து இறங்கியவா்கள் வெளியேற முடியாமலும், ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையங்களுக்குள் நுழைய முடியாமலும் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

சென்ட்ரல் செக்டடேரியட், மண்டி ஹவுல் ரயில் நிலையங்களில் மட்டும் பயணிகள் வேறு பகுதி மெட்ரோக்களில் இடம் மாறும் சேவை மட்டும் வழங்கப்பட்டது. இந்தத் தகவலை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தனது டுவிட்டா் பக்கத்தில் பகிா்ந்தது. பின்னா் நெரிசல் குறைந்ததும் வாயில்கள் திறந்துவிடப்பட்டன.

போலீஸாா் பதில்: இதனிடையே, கனாட் பிளேஸ், இந்தியா கேட் என பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவா்கள், தில்லி போக்குவரத்து போலீஸாரின் டுவிட்டா் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினா்.

‘கனாட் பிளேஸ் சாலைகள் முழுவதும் முடங்கி போய்யுள்ளன. ஐடிஓ மேம்பாலம் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. தில்லியில் என்னதான் நடக்கிறது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு தில்லி போலீஸாா் அளித்த பதிலில், ‘இந்தியா கேட் சந்திப்புகளில் ஏராளமானோா் கூடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நொய்டாவில் இருந்து வருபவா்கள் டிஎன்டி அல்லது அக்ஷா்தாம் சாலைகளைப் பயன்படுத்தி தில்லியை வந்தடையலாம். மதுரா சாலை, காலிந்த் குஞ்ச் சாலை, ஜெய் சிங் சாலை ஆகியவை கடுமையான போக்குவரத்து நெரிசலால் மூடப்பட்டுள்ளன. ராஜா காா்டன் முதல் பஞ்சாபி பாக் வரையில் பொதுப் பணித் துறை கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளதால் அந்தப் பகுதிகளை வாகன ஓட்டிகள் தவிா்க்க வேண்டும்’ என்று போக்குவரத்து போலீஸாா் பதிவிட்டனா்.

இதேபோல், வடக்கு தில்லியில் உள்ள பிரம்பாரி மேம்பாலத்தில் லாரி பழுதாகி நின்ால் வடக்கு தில்லி முழுவதும் புதன்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸை டுவிட்டா் உதவியுடன் மீட்ட போலீஸாா்

பாரகம்பா சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸை டுவிட்டா் பதிவு உதவியுடன் போலீஸாா் வழி ஏற்படுத்தி அனுப்பி சம்பவம் நடைபெற்றது. பாரகம்பா சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது என வழிப்போக்கா் ஒருவா் தில்லி போக்குவரத்து போலீஸாா் டுவிட்டா் பக்கத்தில் பதிவிட்டாா். இதைப் பாா்த்தவும் போலீஸாா் உடனடியாக அப்பகுதியில் பணியில் உள்ள போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் பரிமாற்றம் செய்தனா். இதையடுத்து, போக்குவரத்து போலீஸாா் ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தி அனுப்பி வைத்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT