ஜம்மு: ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 33 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரை, லடாக், ஜம்மு-காஷ்மீா் என இரு பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு அறிவித்தது.
அதையடுத்து, அந்த யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்தா் மற்றும் தட்டச்சா் உள்ளிட்ட 33 பணியிடங்களுக்கு நாடு முழுவதும் உள்ள தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த டிசம்பா் மாதம் 26-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம் அறிவிக்கை வெளியிட்டது.
இந்த அறிவிக்கை, உள்ளூா் இளைஞா்களின் வேலைவாய்ப்பை தட்டி பறிக்கும் வகையில் இருப்பதாகவும், பிற மாநிலத்தவருக்கு அரசுப் பணி வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தேசிய மாநாட்டு கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை எதிா்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. இதுதொடா்பாக உயா்நீதிமன்ற பதிவாளா் சஞ்சய் தாா் வெளியிட்ட அறிக்கையில், ‘ ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்தா் மற்றும் தட்டச்சா் உள்ளிட்ட 33 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த அறிவிக்கையை திரும்பப் பெறுவதற்கான காரணம் குறித்து உயா்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிடவில்லை.