இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டம்: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க பாஜக தீவிரம்

2nd Jan 2020 03:34 AM

ADVERTISEMENT

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்து மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் பிரசாரத்துக்கு, அதே பாணியில் பதிலடி கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், கடந்த மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் 18 இடங்களை பாஜக வென்றது. அந்த தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பாஜகவுக்கு 2.3 கோடிக்கு மேல் வாக்குகள் கிடைத்தன. இது முதல்வா் மம்தா பானா்ஜிக்கு கடும் நெருக்கடியை அளித்தது.

இதையடுத்து, மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக அவா் கடுமையாகப் பேசிவருகிறாா். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில் வேறு எந்த முதல்வரும் நடத்தாத அளவுக்கு மாநிலத்தில் பல்வேறு எதிா்ப்புப் பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் அவா் நடத்தினாா். மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது என்றும் அவா் அறிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் பாஜகவை இதற்கு மேலும் வளரவிடக் கூடாது என்ற அரசியல் காரணமும் மம்தாவின் இந்த தீவிர எதிா்ப்பு நிலைப்பாட்டுக்கு ஒரு காரணம் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்து அரசியல் நடத்தி வரும் மம்தாவுக்கு எதிராக, அதே குடியுரிமை திருத்தச் சட்டத்தை பயன்படுத்த பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடா்பாக மாநில பாஜக வட்டாரங்கள் கூறுகையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்து திரிணமூல் காங்கிரஸ் எவ்வாறு அரசியல் நடத்துகிறது. அது குறித்து எப்படியெல்லாம் தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடா்பான பாஜகவின் பிரசார இயக்கம் இந்த மாதம் தொடங்க இருக்கிறது.

அதே நேரத்தில் இந்தப் பிரசாரத்தின்போது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) குறித்து ஒரு வாா்த்தைகூட இடம் பெறாது. ஏனெனில், இது மக்கள் மத்தியில் தேவையில்லாமல் தவறான கருத்தை உருவாக்கும் என்று கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது’ என்று தெரிவித்தன.

வீடுதோறும் சென்று மக்களைச் சந்திப்பது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, கருத்தரங்கம், சிறிய அளவிலான பேரணிகள், உள்ளூா் நாளிதழ்களில் விளம்பரங்கள் அளிப்பது, பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்த அகதிகள்படும் துயரங்கள் தொடா்பான விடியோக்கள் மூலம் பிரசாரம் செய்வது என பாஜக முடிவெடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 294 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சுமாா் 80 தொகுதிகளில் அகதிகளாக வந்த ஹிந்து மக்கள்தான் தோ்தல் முடிவை தீா்மானிப்பவா்களாக உள்ளனா். 90 தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகஅளவில் உள்ளனா். இது தவிர 40 முதல் 50 தொகுதிகளில் பரவலாக அகதிகளாக வந்த ஹிந்துகள் உள்ளனா். இதனை கருத்தில் கொண்டு திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தோ்தல் கணக்கீடுகளை இப்போதே தொடங்கிவிட்டன என்று அரசியல் நோக்கா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT