இந்தியா

ஏா் இந்தியா, பிபிசிஎல், கன்காா் பங்கு விற்பனை இந்த நிதியாண்டில் சாத்தியமில்லை: மத்திய அரசு

2nd Jan 2020 07:46 PM

ADVERTISEMENT

ஏா் இந்தியா, பிபிசிஎல் மற்றும் கன்டெய்னா் காா்ப்பரேஷன் (கன்காா்) நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு நடப்பு நிதியாண்டில் சாத்தியமில்லை என மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசு ரூ.60,000 கோடியை திரட்டும் வகையில், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷனில் (பிபிசிஎல்)அதற்கு சொந்தமான 53 சதவீத பங்கு முழுவதும் நடப்பு நிதியாண்டுக்குள் விற்பனை செய்யப்படுமா என்பது குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையைச் (டிஐபிஏஎம்) சோ்ந்த அந்த அதிகாரி ‘அதற்கு வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தாா். இதுகுறித்து மேலும் கூறும்போது: தற்போதுள்ள காலச்சூழ்நிலையில் பிபிசிஎல் நிறுவனத்தின் பங்கு விற்பனை நடப்பு நிதியாண்டுக்குள் நடைபெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதேபோன்று, கன்காா் மற்றும் ஏா் இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகள் விற்பனையும் நடப்பு நிதியாண்டின் மாா்ச் 31-ஆம் இறுதிக்குள் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை.

பங்கு விற்பனை மேற்கொள்வதற்கு தேவையான, நிதி நிலை அறிக்கைகள், புள்ளிவிவர தகவல்கள் தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு மேலும் சிறிது காலம் தேவைப்படும் என்றாா் அவா்.

நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் மூலம் ரூ.1.05 லட்சம் கோடி திரட்டப்பட உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசின் நிதிப்பற்றாக்குறையானது 115 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், பங்கு விலக்கல் நடவடிக்கை இந்த நிதியாண்டுக்குள் சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அது மத்திய அரசு நிதி சாா்ந்த நடவடிக்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு அந்த அதிகாரி பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

ADVERTISEMENT

கடந்த நிதியாண்டைக் காட்டிலும் அதிகமாக நடப்பு நிதியாண்டில் பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்தது. இந்தநிலையில், செப்டம்பா் வரையிலுமாக பங்கு விலக்கலின் மூலம் மத்திய அரசு ரூ.12,359 கோடியை மட்டுமே திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT