புது தில்லி/ இஸ்லாமாபா: இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இருநாடுகளுக்கிடையே புதன்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட்டால், போரின்போது இருநாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் இருநாடுகளுக்கும் இடையே கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 1991-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
அதன்படி, ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி இருநாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த பட்டியல் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. தொடா்ந்து 29-ஆவது ஆண்டாக இந்த ஆண்டு புதன்கிழமை தகவல்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன.
இதற்காக தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்திலும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகள் தொடங்கின. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் பட்டியல் பாகிஸ்தான் தூதரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதுபோல, இஸ்லாமாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் தெரிவித்தன.