புது தில்லி: ரயில் கட்டண உயர்வு, சிலிண்டர் விலையேற்றங்கள்தான் மோடி அரசின் புத்தாண்டு பரிசு என்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமரிசித்துள்ளன.
புத்தாண்டுப் பிறப்பான இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக சாடினார். கடந்த நான்கரை ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு இருந்துவிட்டு, பிறர் செய்த நற்செயலுக்கான பாராட்டுகளை மட்டும் ஆம் ஆத்மி எடுத்துக் கொள்கிறது என்று கூறியிருந்தார்.
அதே சமயம், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வன்முறையை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் பரப்பிவிட்டன என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆம் ஆத்மி தனது டிவிட்டர் பக்கத்தில், சிலிண்டர் விலையை ரூ.19 அளவுக்கு பிரகாஷ் ஜவடேகரும், அவரது கட்சியும் உயர்த்தியுள்ளது. இதில் பாராட்டை எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது என்று பதிவிடப்பட்டிருந்தது.
மூத்த காங்கிரஸ் தலைவரும், ஊடக பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்த புத்தாண்டில் மோடி அரசு அளித்த முதல் பரிசு பணவீக்கம். அடுத்து சிலிண்டர் விலை உயர்வு என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், புத்தாண்டு பிறப்புக்கு முன்பே, ரயில் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.