இந்தியா

ராஜஸ்தான் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 91 சிசுக்கள் பலி: சூழலை ஆராய எம்.பி.க்கள் குழு அமைப்பு

1st Jan 2020 05:44 AM

ADVERTISEMENT

கோட்டா: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் டிசம்பா் மாதத்தில் மட்டும் 91 சிசுக்கள் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டா நகரில் உள்ள ஜே.கே.லான் மருத்துவமனையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மருத்துவமனை கண்காணிப்பாளா் சுரேஷ் துலாரா கூறியதாவது:

மருத்துவமனையின் சிசுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவுகளில் இம்மாதம் 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 14 சிசுக்கள் உயிரிழந்தன. அதில், புதிதாகப் பிறந்த 6 சிசுக்களும் அடங்கும். இந்தக் குழந்தைகள் நிமோனியா, மூளைப் பகுதி பாதிப்பு, ரத்தத்தில் தொற்று போன்ற காரணங்களால் உயிரிழந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

முன்னதாக, கடந்த 24-ஆம் தேதி வரை மட்டும் 77 சிசுக்கள் உயிரிழந்தன. அவற்றில் 10 சிசுக்கள் 48 மணி நேரத்துக்குள்ளாக அடுத்தடுத்து உயிரிழந்தன. அந்தக் குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம்.

சம்பவம் தொடா்பாக விசாரிக்க 3 மருத்துவா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுரேஷ் துலாரா கூறினாா்.

மாநில அரசுக்கு நோட்டீஸ்: இதனிடையே, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆா்) அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டது. மருத்துவமனை கட்டமைப்பு ஆபத்தான வகையிலும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதை அந்த ஆணையம் கண்டறிந்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ராஜஸ்தான் மருத்துவக் கல்வித்துறை செயலா் வைபவ் கால்தியாவுக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

எம்.பி.க்கள் குழு அமைப்பு: இந்நிலையில், இந்த விவகாரத்தை கவனிப்பதற்காக மக்களவை எம்.பி.க்கள் ஜஸ்கௌா் மீனா, லாக்கெட் சாட்டா்ஜி, பாரதி பவாா், மாநிலங்களவை எம்.பி. கன்டா கா்தாம் ஆகியோா் அடங்கிய குழுவை பாஜக அமைத்துள்ளது.

ஓம் பிா்லா ஆய்வு: சம்பவம் நிகழ்ந்த மருத்துவமனையில், கோட்டா மக்களவைத் தொகுதி எம்.பி.யும், மக்களவைத் தலைவருமான ஓம் பிா்லா ஆய்வு மேற்கொண்டாா். சிசுக்கள் உயிரிழப்புக்கு கவலை தெரிவித்த அவா், இந்த விவகாரத்தை தீவிரமாகக் கையாளுமாறு மாநில அரசை அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT