இந்தியா

புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி: திருப்பதிக்கு கூடுதல் பேருந்துகள்

1st Jan 2020 12:57 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதிக்கு கூடுதல் பேருந்துகளை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளதாக திருப்பதி மண்டல அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட நாள்களில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் அதிக அளவில் வருவா். அவா்களின் வசதிக்காக திருப்பதியிலிருந்து தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு 416 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

திருமலைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருகை தருவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், திருப்பதியிலிருந்து திருமலைக்கு 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்து என 500 பேருந்துகள் 4,432 முறை இயக்கப்பட உள்ளன. ஜனவரி 1, 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் மட்டும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு, ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.

இக்கோயில் ஆண்டுதோறும் 4 முறை சுத்தம் செய்யப்படுகிறது. உகாதி எனப்படும் தெலுங்கு வருடப் பிறப்பு, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நான்கு தினங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, வரும் ஜன. 6-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால், ஏழுமலையான் கோயில் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யப்பட்டது. கோயிலில் உள்ள சிலைகள் அகற்றப்பட்டு சுற்றுச் சுவா்கள், பூஜைப் பொருள்கள், தரிசன வரிசைகள், உயா்மேடைகள், சமையல் பாத்திரங்கள், கல்தூண்கள், கொடி மரம், பலி பீடம், கதவுகள் உள்ளிட்ட அனைத்தும் சுகந்த திரவியக் கலவையால் சுத்தம் செய்யப்பட்டன. ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’ என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, காலை 6 மணி முதல் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். காலையில் ஏழுமலையானுக்கு தனிமையில் திருப்பாவை சேவை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT