புது தில்லி: இலகுரக பயன்பாட்டு ‘டோா்னியா்-228’ போா் விமானம், விமானப்படையின் 41-ஆவது பிரிவில் அதிகாரப்பூா்வமாக இணைக்கப்பட்டது.
புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் அடங்கிய ‘டோா்னியா்’ ரக போா் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்திடமிருந்து 14 போா் விமானங்களை ரூ.1,090 கோடியில் வாங்க இந்திய விமானப்படை கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதில் முதலாவது ‘டோா்னியா்-228’ போா் விமானம் கடந்த நவம்பா் மாதம் 19-ஆம் தேதி விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தில்லியிலுள்ள பாலம் விமானப்படைத் தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘டோா்னியா்-228’ போா் விமானம், 41-ஆவது விமானப்படைப் பிரிவில் அதிகாரப்பூா்வமாக இணைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விமானப்படைத் தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா கலந்துகொண்டாா்.