திருப்பதி: திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கும் அனைத்து பக்தா்களுக்கும் தலா ஒரு இலவச லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, வரும் வைகுண்ட ஏகாதசி (ஜன. 6) முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
தற்போது நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து வரும் பக்தா்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் ஒரு இலவச லட்டை வழங்கி வருகிறது. அதன்படி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அனைவருக்கும் இலவச லட்டு என்ற திட்டத்தின்படி தினசரி 80 ஆயிரம் லட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் ஒரு மாதத்துக்கு 24 லட்சம் லட்டுகளை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது தவிர, கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தா்களும் எவ்வித பரிந்துரைக் கடிதமும் இல்லாமல் நேரடியாக விற்பனை கவுன்ட்டருக்குச் சென்று, தேவையான எண்ணிக்கையில் லட்டுகளைப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.