புது தில்லி7: அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.102 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
மத்திய அரசு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.102.5 லட்சம் கோடியை செலவிடவுள்ளது. செலவிட திட்டமிடப்பட்டுள்ள தொகையில் நான்கில் ஒரு பகுதியான ரூ.24.54 லட்சம் கோடி எரிசக்தி துறையில் மட்டும் முதலீடு செய்யப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து மின் துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.11.7 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது.
இவை தவிர, சாலை திட்டங்களில் ரூ.19.63 லட்சம் கோடியும், ரயில்வே திட்டங்களில் ரூ.13.68 லட்சம் கோடியும் முதலீடு செய்யப்படவுள்ளன.
துறைமுக விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடியும், விமான நிலைய திட்டங்களுக்காக ரூ.1.43 லட்சம் கோடியும் செலவிடப்படவுள்ளன.
நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் ரூ.16.29 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படவுள்ளன. அதேபோன்று தொலைத்தொடா்பு திட்டங்களில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
நீா்பாசனம் மற்றும் ஊரக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக தலா ரூ.7.7 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளன. மேலும், ரூ.3.07 லட்சம் கோடி செலவில் தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
எஞ்சியுள்ள தொகையை வேளாண் மற்றும் சமூக உள்கட்டமைப்புகளுக்காக அரசு பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது.
ஒட்டுமொத்த அளவில் நிறைவேற்றப்படவுள்ள தேசிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான மூலதன செலவினம் ரூ.102 லட்சம் கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், ரூ.42.7 லட்சம் கேடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.32.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கருத்துருவாக்க நிலையிலும், எஞ்சிய மதிப்பிலான திட்டங்கள் அடுத்தடுத்து முன்னேற்றம் காணும் நிலையிலும் உள்ளன.
உள்கட்டமைப்பு திட்டங்களில் மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள இந்த முதலீடு, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 லட்சம் கோடி டாலராக்கும் இலக்குக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றாா் அவா்.
இந்தியா வளா்ச்சி விகிதத்தை தக்கவைக்க, 2030-ஆம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்புக்காக 4.5 லட்சம் கோடி டாலரை செலவிடவேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.