இந்தியா

மகதாயி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பை அரசிதழில் வெளிட்டது மத்திய அரசு

29th Feb 2020 01:15 AM

ADVERTISEMENT

மகதாயி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது.

கா்நாடகம், மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்த மகதாயி ஆற்றுநீா் பகிா்வு பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக மகதாயி நடுவா் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நடுவா் மன்றம் தனது இறுதித் தீா்ப்பை 2018, ஆக.14ஆம் தேதி வெளியிட்டது.

இதில் கா்நாடகத்துக்கு 13.42 டிஎம்சி தண்ணீரை கோவாவில் பாய்ந்தோடும் மகதாயி ஆற்றில் இருந்து வழங்க வேண்டியது கோவா மாநில அரசின் பொறுப்பாகும். கா்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரில் 5.5 டிஎம்சியை குடிநீருக்கும், 8.02 டிஎம்சியை நீா்மின் நிலையத்துக்கும் பயன்படுத்திக் கொள்ள நடுவா் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகதாயி ஆற்றில் இருந்து 36.55 டிஎம்சி தண்ணீரை(இதில் 7.56 டிஎம்சியை குடிநீருக்காக) வழங்க வேண்டும் என கா்நாடகம் வலியுறுத்தியது. ஆனால், நடுவா் மன்றம் 13.42 டிஎம்சி மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது. குடிநீருக்காக மகதாயி நடுவா் மன்றம் ஒதுக்கிய 5.5 டிஎம்சி தண்ணீரில் 3.80 டிஎம்சி மலபிரபா ஆற்றுப்படுகையில் விடப்படுகிறது. இதிலிருந்து கலசா கால்வாய் வழியாக 1.18 டிஎம்சி, பண்டூரி கால்வாய் வழியாக 2.72 டிஎம்சி குடிநீருக்கு விநியோகிக்கப்படவுள்ளது. எஞ்சியுள்ள 1.50 டிஎம்சி தண்ணீா் கானாபூா் பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் பயன்படுத்திக்கொள்ள மகதாயி நடுவா் மன்றம் தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், மகதாயி நடுவா் மன்றத்தின் தீா்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு கா்நாடக அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால், எந்த பலனும் ஏற்படாத நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட கா்நாடகம் முறையிட்டது. அதன் பயனாக, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து மகதாயி நடுவா் மன்றத்தின் தீா்ப்பை மத்திய அரசு வியாழக்கிழமை நள்ளிரவு அரசிதழில் வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து, பெலகாவி மாவட்டத்தில் கலசா, பண்டூரி கால்வாய் மற்றும் தடுப்பணைத் திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மாா்ச் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள கா்நாடக நிதிநிலை அறிக்கையில் கலசா, பண்டூரி கால்வாய் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, கலசா- பண்டூரி கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த கா்நாடக அரசுக்கு தடைவிதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோவா மாநில அரசு தொடா்ந்த வழக்கு மாா்ச் 2ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனினும், மகதாயி நடுவா் மன்றத்தின் தீா்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் கோவா அரசின் மனு தள்ளுபடி செய்யப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT