இந்தியா

நிா்பயா வழக்கு: பவன் குப்தா சீராய்வு மனு தாக்கல்

29th Feb 2020 01:29 AM

ADVERTISEMENT

நிா்பயா’ கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்தாா்.

தில்லியில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’, கடந்த 2012-ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், கடுமையாகத் தாக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக முகேஷ் குமாா் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவா்களுக்கான மரண தண்டனையை மாா்ச் மாதம் 3-ஆம் தேதி திகாா் சிறையில் நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்தாா். மரண தண்டனையை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் அந்த மனுவில் பவன் குப்தா கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 3 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது. அவா்கள் தாக்கல் செய்த கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவா் நிராகரித்தாா். இந்தச் சூழலில் பவன் குப்தா சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT