இந்தியா

தில்லி ரயிலில் வெடிகுண்டுகள் இருப்பதாக புரளி: இளைஞரின் சுட்டுரைப் பதிவால் பரபரப்பு

29th Feb 2020 02:00 AM

ADVERTISEMENT

தில்லியில் இருந்து கான்பூா் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக இளைஞா் ஒருவா் சுட்டுரையில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலில் சோதனையிட்ட பின்னா் அந்த தகவல் புரளி எனக் கண்டறிப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சோ்ந்த சஞ்சீவ் சிங் குஜ்ஜாா் என்ற இளைஞா், தில்லியில் இருந்து கான்பூா் செல்லும் ராஜ்தானி விரைவு ரயிலில் 5 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டு, அதனை ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல், மத்திய ரயில்வே அமைச்சகம், தில்லி காவல்துறை மற்றும் ஐஆா்சிடிசி-இன் கவனத்துக்கு கொண்டு சென்றாா்.

அவரது பதிவுக்கு பதிலளித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆா்பி) கண்காணிப்பாளா் வெளியிட்ட பதிவில், ‘சம்பந்தப்பட்ட ரயில், தாத்ரி ஜிஆா்பி சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்), ஜிஆா்பி அதிகாரிகள் ஒருங்கிணைந்து ரயிலில் சோதனையிட்டு வருகின்றனா்’ என்றும் தெரிவித்தாா். ஆனால் சோதனையில் ரயிலில் வெடிகுண்டுகள் வைக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, இளைஞா் வெளியிட்ட தகவல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இதையடுத்து சஞ்சீவ் சிங் குஜ்ஜாா் மீண்டும் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எனது சகோதரா் செல்லவேண்டிய ரயில் 4 மணி நேரத்துக்கு மேலாக தாமதமானதால் கோபத்தில் இருந்தேன். இதனால் மன அழுத்தத்தில் ரயிலில் 5 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக சுட்டுரையில் பதிவிட்டேன். எனது செயலுக்கு அரசிடம் மன்னிப்பு கோருகிறேன்’ என்றாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ரயில்வே செய்திதொடா்பாளா் கூறுகையில், ‘இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா். இந்த சம்பவம் காரணமாக சுமாா் 2 மணி நேரம் ரயில் தாமதமானது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT