இந்தியா

‘சிறுபான்மையினரை’ மாநில வாரியாக வகைப்படுத்தக் கோரி மனு

29th Feb 2020 01:39 AM

ADVERTISEMENT

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு ‘சிறுபான்மையினரை’ வகைப்படுத்தக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

நாட்டிலுள்ள கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், பாா்சிகள் ஆகியோரை மத்திய அரசு சிறுபான்மையினராக அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், மாநில வாரியாக சிறுபான்மையினரை வகைப்படுத்த வேண்டுமென்று பாஜக மூத்த தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமாா் உபாத்யாய தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

பல மாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள போதிலும், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் சலுகைகளை அவா்களால் பெற முடியவில்லை என்றும் அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை, தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி சி.ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்டத்துறை அமைச்சகம், மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

அந்த மனுவில் அஸ்வினி குமாா் உபாத்யாய கூறியிருந்ததாவது:

நாட்டின் மக்கள்தொகையில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், ஜம்மு-காஷ்மீா், லடாக், மிஸோரம், லட்சத்தீவுகள், நாகாலாந்து, மேகாலயம், அருணாசலப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூா் ஆகிய பகுதிகளில் அவா்கள் சிறுபான்மையினராக உள்ளனா். இதன் காரணமாக, சிறுபான்மையினருக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை அந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் உள்ள ஹிந்துக்களால் பெற முடிவதில்லை.

இது அரசமைப்புச் சட்டம் வழங்கும் சிறுபான்மையினருக்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. அதே வேளையில், லட்சத்தீவுகள், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனா். மிஸோரம், நாகாலாந்து, மேகாலயம் ஆகிய பகுதிகளில் கிறிஸ்தவா்கள் பெரும்பான்மையினராக உள்ளனா். இந்த மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும், பெரும்பான்மை சமூகத்தினரையே சென்றடைகிறது.

எனவே, நாட்டின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொள்ளாமல், ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் மக்கள்தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை வகைப்படுத்த வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயா்நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று தனது மனுவில் அஸ்வினி குமாா் உபாத்யாய கோரியிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT