இந்தியா

இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் செம்மையானால்  இந்தியா வல்லரசாக மாறும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

29th Feb 2020 02:24 AM

ADVERTISEMENT


இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் சிறப்படைந்தால் இந்தியா வல்லரசாக மாறும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) 6-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, என்.ஐ.டி. இயக்குநர் டாக்டர் கே. சங்கரநாராயணசாமி தலைமை வகித்தார். இதில், மத்திய அரசின்  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முதன்மை விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியது: 

மாணவர்கள் தேசத்தின் வளர்ச்சி, சமூகத்துக்கு உதவுதல்,  சுய மேம்பாட்டை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்திய மென்பொருள் தயாரிப்பாளர்கள், மருத்துவர்கள் புகழ்பெற்றவர்களாக உள்ளார்கள். மாணவர்கள் ஆராய்ச்சியிலும், புதுமைகளைக் கண்டறிவதிலும் ஆர்வம் செலுத்த  வேண்டும்.
 கடலுக்கு உபரியாக செல்லும் 1, 200 டி.எம்.சி. நீரைத் தடுக்கும் வகையில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில், கோதாவரியிலிருந்து கிருஷ்ணா, பெண்ணாறு வழியாக கடைமடைப் பகுதிக்குக்கு 1, 252 கி.மீ. தொலைவுக்கு  நீரைக் கொண்டு செல்லும் போலாவரம் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. 

அண்மையில் சுவீடன் நாட்டுக்கு சென்றபோது எலக்ட்ரிக் நெடுஞ்சாலை பயன்பாட்டில் உள்ளதைப் பார்த்தேன். நாம் எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களுக்காக அதிக செலவு செய்து கொண்டிருக்கிறோம். மாற்று எரிசக்தியை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து செயல்படவேண்டியுள்ளது.
நம் நாட்டில் அண்மையில் இரண்டு தனியார் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தேன். குஜராத்தின் கண்டலா பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பதி செய்யும் நிலையம் உள்ளது. அதுபோல் இங்குள்ள கடலோரப் பகுதிகளில் மின் உற்பத்தி செய்து கடல் நீரை நன்னீராக்கி விவசாயத்துக்குப் பயன்படுத்த முன்வரவேண்டும்.   

ADVERTISEMENT

மீத்தேன், எத்தனால், பயோ டீசல் ஆகியவற்றால் இயங்கும் 400 நவீன பேருந்துகள் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னும் 10 நாள்களில் இயக்கப்படவுள்ளன. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி மிச்சமாகும். 
மாணவர்கள், சமூகத்துக்கும் ஏழை மக்களுக்கும் பங்காற்ற வேண்டும்.  நம் நாட்டை பொருளாதார வல்லரசாக மாற்றும் வகையில் பங்களிப்பை செய்ய வேண்டும்.  "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம்செயல்பாட்டில் உள்ளது. இது செம்மையானால் இந்தியா வல்லரசாக மாறும். கல்வி, ஆராய்ச்சி என எந்தத்  துறையானாலும் குழு முயற்சியால்தான் சாதிக்க முடியும் என்றார் நிதின் கட்கரி.

நிகழ்ச்சியில்,  104 பி.டெக் மாணவர்கள், 8 எம்.டெக் மாணவர்கள் மற்றும் பி.எச்டி மாணவர்கள் 4 பேர் பட்டம் பெற்றனர். முன்னதாக, என்.ஐ.டி. வளாகத்தில் ரூ.12.38 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிர்வாக வளாகக் கட்டடத்தை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
நவீன முறையில், சுகாதாரமான வகையில் சூரிய ஆற்றல் மூலம் மீனை உலர்த்தி கருவாடாக மாற்றக்கூடிய வகையில் என்.ஐ.டி. மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மீன் உலர்த்தியை கோட்டுச்சேரி மீனவர்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் வழங்கினார்.

 புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி, வேளாண் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், என்.ஐ.டி. பதிவாளர் (பொ) டாக்டர் ஜி. அகிலா,  மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT