இந்தியா

தில்லியில் வன்முறை பரவியதற்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்ச நீதிமன்றம்

26th Feb 2020 11:41 AM

ADVERTISEMENT


புது தில்லி: தலைநகர் புது தில்லியில் வன்முறை இந்த அளவுக்குப் பரவியதற்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

நிலைமை கைமீறி செல்லும் அளவுக்கு ஏன் விட்டுவிட்டீர்கள் என்று மத்திய அரசையும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

தில்லி வன்முறைச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் இதுபோன்ற வன்முறை நடப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், காவல்துறையினர் சரியாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இதுபோன்ற மிக மோசமான வன்முறையைத் தவிர்த்திருக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

தில்லியில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், காவலர் ஒருவர் மிக மோசமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதைக் கேட்ட நீதிபதிகள், அதையேதான் நாங்களும் கேட்கிறோம், தில்லியில் நிலைமை இந்த அளவுக்கு கைமீறிச் செல்லக் காரணம் என்ன? உங்களிடம் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. காவல்துறை உள்ளது. அனைத்து வசதிகளும் உள்ளன. காவல்துறையினர் மிகச் சரியாக திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இந்த நிலைமையைத் தவிர்த்திருக்கலாமே? உத்தரவுகள் முறையாகப் பிறப்பிக்கப்பட்டு, அது காவல்துறையைச் சென்றடைந்ததா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல்துறையின் மெத்தனப்போக்கே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், தில்லி வன்முறைச் சம்பவம் குறித்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தியது.

Tags : delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT