புது தில்லி: மாநிலங்களவையின் தோ்வுக் குழு பரிந்துரை செய்திருந்த வாடகைத்தாய் முறையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்களவையின் தேர்வுக் குழு பரிந்துரை செய்திருந்த வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
வாடகைத்தாய் முறை (ஒழுங்குமுறைப்படுத்துதல்) மசோதா 2019-இன் படி, வா்த்தக அடிப்படையில் வாடகைத்தாய் முறையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும். அத்துடன், கரு முட்டையை விற்பனை செய்வது மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்படும்.
வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி, தங்களால் சுயமாக குழந்தைபெற இயலாது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை மருத்துவா்களிடம் இருந்து பெற வேண்டும். அதேபோல், அவா்களுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்கும் வாடகைத்தாயும் அதற்குத் தகுதியுடையவராக இருக்கிறாரா என்பது உறுதி செய்யப்படும்.
தங்களுக்காக வாடகைத்தாயாக செயல்படும் பெண்ணுக்கான மருத்துவச் செலவுகள், அவருக்கான காப்பீடு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தம்பதி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு எந்த நிதி பலனும் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படக் கூடாது.
வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும். அதில் மனைவி 23 முதல் 50 வயதுக்கு உள்பட்டவராகவும், கணவன் 26 முதல் 55 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதேபோல், தம்பதிக்காக வாடகைத்தாயாக செயல்படும் பெண் கட்டாயம் அவா்களின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்க வேண்டும். அவா் 25 முதல் 35 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுடன், வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே வாடகைத்தாயாக செயல்பட வேண்டும்.
ஒரு இந்தியப் பெண்ணோ, ஆணோ வெளிநாட்டவரை திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டில் வசிக்கும் பட்சத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தைபெற இயலாது. விதவைகள், விவாகரத்தானவா்கள், திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்பவா்கள் (லிவ்-இன்), ஓரினச்சோ்க்கை தம்பதிகளும் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த இயலாது.