வாகனத்தில் எரிவாயு நிரப்பிய பின்னர் ரூ.5 சில்லறையை திருப்பிக்கேட்ட 68 வயது முதியவர் சரமாரியாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,
மும்பையின் கிழக்கு போரிவாலி பகுதியில் அமைந்துள்ள மாகதானே வாகன எரிவாயு நிலையத்தில் ராம்துலார் சிங் யாதவ் (68), செவ்வாய்க்கிழமை இரவு தனது வாகனத்தில் எரிபொருள் நிரப்பியுள்ளார். அப்போது அதற்கான பணத்தை அளித்து மீதம் ரூ.5 சில்லறையை திருப்பி அளிக்குமாறு கேட்டுள்ளார்.
இதனால், அந்த எரிவாயு நிரப்பும் நிலையத்தில் இருந்த 5 பேரும் ஆத்திரமடைந்து, முதியவர் ராம்துலாரை அவதூறாகப் பேசி, சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராம்துலார் மயங்கியதையடுத்து 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் சுதாரித்துக்கொண்டவர் போராடி வீடு திரும்பியவுடன் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். மேலும், துரதிருஷ்டவசமாக வீட்டிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் சந்தோஷ் யாதவ், கஸ்தூரிபா சாலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட போலீஸார், 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.