புது தில்லி: வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தில்லி முதல்வரும் துணை முதல்வரும் செல்ல வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வடகிழக்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தில்லி முதல்வரும், துணை முதல்வரும் நேரில் செல்ல வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்க இது ஒன்றே வழி.
வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறையில் உளவுப் பிரிவு அதிகாரி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. 1984ம் ஆண்டு நிகழ்ந்தது போல் மீண்டும் ஒரு சம்பவத்தை உருவாக்கி விடக் கூடாது.
பன்முகத் தன்மை கொண்ட இந்த நாட்டில் இதுபோன்ற வன்முறையை மீண்டும் அனுமதிக்கக் கூடாது. மக்கள் பாதுகாப்பாக இருப்பதை முதல்வரும் துணை முதல்வரும் உறுதி அளிக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.