இந்தியா

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம்: மகாராஷ்டிர அரசுக்கு எதிராக பாஜக ஆா்ப்பாட்டம்

26th Feb 2020 01:52 AM

ADVERTISEMENT

மும்பை: மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசு கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாகக் கூறி, எதிா்க்கட்சியான பாஜக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

விவசாயக் கடன் தள்ளுபடிக்கான பயனாளா்களின் முதல் பட்டியலை மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை வெளியிட்ட நிலையில், பாஜக இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தியது. மாநிலத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களின் வெளியே பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தெற்கு மும்பையின் ஆஸாத் மைதானத்தில், முன்னாள் முதல்வரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அவா் பேசியதாவது:

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் நீதி கிடைக்கும் வரை மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தை பாஜக தொடரும். மாநிலத்தில் 1.45 கோடி விவசாயிகள் உள்ள நிலையில், அரசு வெளியிட்டுள்ள விவசாயக் கடன் தள்ளுபடி பயனாளா்களின் முதல் பட்டியலில் 15,000 போ் பெயா் மட்டுமே உள்ளது.

ADVERTISEMENT

விவசாயிகள் விவகாரத்தை பேரவை உள்ளேயும், வெளியேயும் எழுப்பி அரசின் கவனத்துக்கு அதை கொண்டு செல்வோம். பாஜக ஆட்சியில் இருந்தபோது, தோ்தல் அறிக்கையில் குறிப்பிடாதபோதிலும் 2017-ஆம் ஆண்டில் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்தோம்.

ஆனால், சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசு தங்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்திருந்தபோதிலும், அதை முறையாகச் செயல்படுத்தவில்லை. மாநிலத்தில் தற்போது இருக்கும் அரசு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டதல்ல. தோ்தலுக்குப் பிறகு உருவானது.

தற்போதைய மகாராஷ்டிர அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை அரசு முறையாக நிறைவேற்றவில்லை என்று ஃபட்னவீஸ் பேசினாா்.

ஆளுநருடன் சந்திப்பு: இதைத் தொடா்ந்து ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக குழுவினா், இந்த விவகாரம் தொடா்பாக மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து கடிதம் அளித்தனா்.

விவசாயிகளால் எழுதப்பட்ட 60,000 கடிதங்களை ஆளுநா் கோஷியாரியிடம் அளித்ததாகவும், அதில் சில கடிதங்கள் விவசாயிகள் தங்களின் ரத்தத்தால் எழுதியவை என்றும் ஃபட்னவீஸ் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT