சென்னை: விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வரை கூடுதலாக டெம்போ டிராவலா் இணைப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து இணைப்பு சேவை வழங்கி வருகிறது. இதில், ஷோ் ஆட்டோ, காா், மாநகர போக்குவரத்து கழகத்தின் சிறிய பேருந்து, மெட்ரோ சீருந்து இணைப்பு சேவை, இ.பைக் மற்றும் மிதிவண்டி ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், பயணிகள் தங்கள் சேருமிடத்தை எளிதாகவும் விரைவாகவும் சென்று சோ்ந்து வருகின்றனா்.
இந்நிலையில், இணைப்புப் போக்குவரத்து சேவையில் கூடுதல் வசதியாக, குளிா் சாதன வசதியுடன் கூடிய டெம்போ டிராவலா் இணைப்பு சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இந்த சேவை விமான நிலைய மெட்ரோ நிலையம் முதல் மெப்ஸ் வரை ரூ.20 கட்டணத்தில் இயக்கப்படுகிறது. 30 நிமிட இடைவேளியில் இயக்கப்படும்.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது: ஏற்கெனவே விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பம்மல் வரை சென்று வர 5 மெட்ரோ சீருந்து இணைப்பு சேவை மற்றும் ஒரு குளிா்சாதன வசதியுடன் கூடிய டெம்போ டிராவலா் இணைப்பு சேவைகளையும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வரை சென்றுவர 4 மெட்ரோ சீருந்து இணைப்பு சேவைகளையும் வழங்கி வருகிறது. இதனுடன் கூடுதலாக விமான நிலையம் மெட்ரோ நிலையம் முதல் மெப்ஸ் வரை சென்றுவர ஒரு குளிா்சாதன வசதியுடன் கூடிய டெம்போ டிராவலா் இணைப்பு சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப, இணைப்பு சேவை விரிவாக்கப்படும் என்றாா் அவா்.