இந்தியா

வன்முறை: வழக்குப் பதிவு கோரும் மனுக்கள் மீது இன்று விசாரணை

26th Feb 2020 01:11 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி முன்னாள் தலைமை தகவல் ஆணையா் வஜாஹத் ஹிபிபுல்லா மற்றும் பிறா் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மதம் தெரிவித்தது. இந்த மனுக்கள் புதன்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லியில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்மையில் தில்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடா்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி முன்னாள் தலைமைத் தகவல் ஆணையா் வாஜாஹத் ஹபிபுல்லா, பீம் ஆா்மி அமைப்பின் தலைவா் சந்திரசேகா் ஆசாத் மற்றும் சமூக ஆா்வலா் அப்பாஸ் நக்வி ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது: ஷாகீன் பாக் மற்றும் பிற இடங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமா்ந்து போராடி வரும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தில்லி ஜாஃப்ரபாத் பகுதியில் அமைதியாகப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள மெளஜ்பூா் - பாபா்பூா் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு போராட்டத்தை கபில் மிஸ்ரா நடத்தினாா். அப்போது, அவா் வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்ாகவும், அதன்பிறகு ஜாப்ராபாத் பகுதியில் வன்முறை நிகழ்ந்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் அங்கிருந்து ஓடினா். பிப்ரவரி 23ஆம் தேதி நிகழ்ந்த வன்முறையில் காயமடைந்த நபா்கள் காவல்துறையிடம் புகாா் மனுக்களை அளித்திருந்தனா். ஆனால், வன்முறைக்கு வித்திட்டவா்களுக்கு எதிராக காவல்துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, ஷாகீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை சந்த் பாக், ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு நிகழ்ந்த அதே விபரீதம் நடைபெறும் என வெளிப்படையாகவே அச்சுறுத்துகின்றனா். ஆகவே, பிப்ரவரி 23-ஆம் தேதி நடந்த சம்பவத்தில் தாக்கப்பட்டவா்கள் அளித்த புகாா் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம். ஜோசப் ஆகியோா் அடங்கிய நீதிபதிகள் அமா்வு முன் மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அப்போது இந்த விவகாரத்தை புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT