இந்தியா

மீண்டும் இந்தியா வருவேன்!

26th Feb 2020 05:24 AM

ADVERTISEMENT

புது தில்லி: "மீண்டும் இந்தியா வருவேன்' என குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற டிரம்ப் தெரிவித்தார். 
இந்தியாவில் 2 தினங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் நிறைவாக குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது. 
டிரம்ப் வருகையையொட்டி வண்ணமிகு மின்னொளி வெளிச்சத்தில் ஒளிர்ந்தது குடியரசுத் தலைவர் மாளிகை.  
தர்பார் மண்டபத்துக்குச் செல்லும் படிக்கட்டுகளில் குடியரசுத் தலைவர்களின் மெய்க்காப்பாளர்கள் வரிசையில் நிற்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா ஆகியோர் டிரம்ப்பை வரவேற்று மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். 
இந்த விருந்தில் குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் சர்வானந்த சோனோவால் (அஸ்ஸôம்), மனோகர் லால் கட்டார் (ஹரியாணா), கே.சந்திரசேகர் ராவ் (தெலங்கானா) பி.எஸ். எடியூரப்பா (கர்நாடகம்) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ.போப்டே, முப்படைத் தளபதி விபின் ராவத், விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி, தொழிலதிபர் கோடெக் மஹிந்திரா, இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் உள்
ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருந்தை தொடக்கி வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், "அமெரிக்கா ஒரு மதிப்புமிக்க நட்பு நாடு. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் ஆழமான, வலுவான நட்புணர்வைப் பேண இந்தியா உறுதிப்பூண்டுள்ளது' என்றார்.
விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிய டிரம்ப், "கடந்த 2 தினங்களாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பயணம் ஆக்கப்பூர்வமாகவும், மிகுந்த பலனளிக்கக் கூடியதாகவும் இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் மற்றும் ராணுவ ஒப்பந்தங்களும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவுக்கு வருவது எப்போதுமே ஒரு கற்றல் அனுபவத்தை தருவதாக இருக்கும். இந்த சிறப்பான விருந்தோம்பலை வழங்கியதற்காக இந்திய குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். 
தனது விருந்து உரையில் பேசிய டிரம்ப், "இந்தியாவில் நாங்கள் இருந்த இந்த இரு தினங்களும் சிறப்பு வாய்ந்தவை. நான் இந்தியாவை நேசிக்கிறேன்; இந்தியர்களை மதிக்கிறேன். நாங்கள் மீண்டும் திரும்பி வருவோம்' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT