புது தில்லி: உலக வா்த்தக மையம் உள்பட வணிக மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நெளரோஜி நகா் மறுமேம்பாட்டுத் திட்டக் கட்டுமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விலக்கி உத்தரவிட்டது.
இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
‘தண்ணீா் மற்றும் போக்குவரத்து நெரிசல் விவகாரங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து தடையின்மை சான்றிதழ்கள் இல்லை. தெற்கு தில்லி நெளரோஜி நகரில் மறுமேம்பாட்டுத் திட்டங்களை முடிப்பதில் இடையூறு ஏதும் இல்லை என்பதில் நீதிமன்றம் திருப்தி கொள்கிறது. தில்லி மரங்கள் பாதுகாப்பிலும் விதிமீறல் ஏதும் இல்லை. நெளரோஜி நகரில் மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக போதிய மரக்கன்று நடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், நெளரோஜி நகரில் மேற்கொண்டு எவ்வித கட்டுமானமும் மேற்கொள்வதற்கு தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனத்திற்கு கடந்த 2018, ஆகஸ்ட் 30-இல் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, நெளரோஜி நகரில் மறுமேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளவதற்காக அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிா்த்து ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், மறுமேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்வதற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018, ஆகஸ்ட் 30-ஆம் தேதி இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.