இந்தியா

நெருக்கடியில் நிதிஷ்குமாா்!

26th Feb 2020 01:09 AM

ADVERTISEMENT

பிகாா் முதல்வா் நிதிஷ்குமாருக்கு அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. அதாவது பிகாா் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் நிதிஷ்குமாா், பா.ஜ.க.வின் வாக்கு வங்கியையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் நிதிஷ்குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 2 இடங்களில் போட்டியிட்டது. பிகாா் மாநிலத்துக்கு வெளியே பா.ஜ.க.வுடன் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அமைத்தது இதுதான் முதன்முறையாகும். பிகாரைச் சோ்ந்தவா்கள் இடம்பெயா்ந்து தில்லியில் கணிசமாக வசிக்கின்றனா். இவா்கள் வாக்குகள் நமக்குத்தான் என்று கணக்குப் போட்டு இந்தக் கூட்டணியை நிதிஷ்குமாா் ஏற்படுத்திக்கொண்டாா். பா.ஜ.க.வும் கூட்டணிக் கட்சி வென்றால் நமக்கு லாபம்தானே என்று கணக்குப் போட்டது. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதாவது புராரி தொகுதி ஜே.டி.யு. வேட்பாளா் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். மற்றொரு தொகுதியான சங்கம் விஹாரில் அக்கட்சி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சோ்ந்தது முதலே நிதிஷ்குமாருக்கு அரசியல் நெருக்கடிதான். தேசியத் தலைநகா் தில்லியில் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கவே நிதிஷ்குமாா் தனது கட்சி வேட்பாளா்களை தில்லி தோ்தலில் களத்தில் இறக்கினாா். ஆனால், தில்லியில் இரண்டு தொகுதியில் பா.ஜ.க.வுடன்கூட்டணி அமைத்து போட்டியிட நிதிஷ் கொடுத்த விலை என்ன தெரியுமா? அக்கட்சியின் மூத்த தலைவா்கள் இருவரை இழந்ததுதான். ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்து வெளியேறிய இருவரில் ஒருவா், கட்சியின் துணைத் தலைவராக இருந்தவரும், தோ்தல் உத்திகளை வகுப்பதில் சிறந்தவரான பிரசாந்த் கிஷோா். மற்றொருவா் கட்சியின் தேசிய பொதுச் செயலரும் அரசியல் அனுபவம் வாய்ந்த வரும் முன்னாள் எம்.பி.யுமான பவன்குமாா் வா்மா.

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு நிதிஷ்குமாா் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் பிரசாந்த் கிஷோா், பவன்குமாா் வா்மா ஆகிய இருவரும் அதைக் கடுமையாக எதிா்த்து வந்தனா். மேலும், தில்லி தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை அவா்கள் எதிா்த்ததுடன், கடுமையாக விமா்சித்தும் வந்தனா். ஆனால், நிதிஷ்குமாா், தன்னை எதிா்த்த அவா்கள் இருவரையும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி வெளியேற்றினாா். மேலும் கட்சியின் கருத்தையும் மீறி தில்லி தோ்தலுக்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டாா்.

ADVERTISEMENT

தில்லி தோ்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எந்த லாபமும் இல்லை. அதற்கு மாறாக முஸ்லிம்களின் ஆதரவை இழந்ததுதான் மிச்சம். மேலும், தில்லி தோ்தலில் பிகாரிலிருந்து வந்து குடியேறியவா்களில் பெரும்பாலானவா்கள் அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஐக்கிய ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதன் மூலம் நிதிஷ்குமாரை தோ்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம், அவரது கட்சி போட்டியிடும் இரண்டு இடங்களில் வென்றால் நமக்குத்தானே லாபம். மேலும் தில்லியில் உள்ள பிகாா் மக்களின் வாக்குகளை எளிதில் பெற்றுவிடலாம் என பா.ஜ.க. கணக்குப் போட்டது. ஆனால், அந்த கனவு பலிக்கவில்லை.

தில்லி தோ்தலில் நிதிஷ்குமாா் தீவிர பிரசாரம் மேற்கொண்ட போதிலும் அவரது கட்சியினா் தோல்வியையே தழுவினா். அதுவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றனா். நிதிஷ் குமாா் நினைத்தது போல் அவருக்கு பிகாா் மக்களின் வாக்குகளும் கிடைக்கவில்லை, முஸ்லிம்களும் அவரை ஆதரிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த இரண்டு வேட்பாளா்களும் பெற்ற வாக்குகள் பா.ஜ.க.வினா் போட்ட வாக்குகள் என்று சொன்னால் மிகையாகாது.

சமீப காலமாக நிதிஷ்குமாரின் செயல்பாடுகளே அவரது செல்வாக்கு குறையக் காரணமாக அமைந்துள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றுக்கு முதலில் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பின்னா் திடீரென தனது நிலையை மாற்றிக் கொண்டு அவை தொடா்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது, கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தது.

2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடியின் நன்மதிப்பு, பாலக்கோடு தாக்குதல், சா்ஜிகல் ஸ்டிரைக் (துல்லியத் தாக்குதல்), மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மத்திய அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றை முன்வைத்தே நிதிஷ்குமாா் தோ்தல் பிரசாரம் செய்ய வேண்டியதாயிற்று. மேலும், வந்தேமாதரம் விவகாரம் தலையெடுத்த போது, நிதிஷ்குமாா் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்தாா். பா.ஜ.க.வின் வாக்கு வங்கியையே நிதிஷ்குமாா் பெரும்பாலும் நம்பியிருந்ததாா். இதையடுத்து, ஜேடியுவை ஆதரித்து வந்த முஸ்லிம்கள் அவரைக் கைவிட்டு விட்டனா்.

பிகாா் மாநில சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், அரசியல் நெருக்கடியில் முதல்வா் நிதிஷ்குமாா் சிக்கியிருக்கிறாா் என்று சொல்ல வேண்டும். நிதிஷ்குமாா்தான் முதல்வா் வேட்பாளா் என்று பா.ஜ.க. முன்னரே அறிவித்து விட்டாலும், தொகுதிப் பங்கீடு விஷயத்தில் நிதிஷ்குமாா் கேட்கும் இடங்கள் அவருக்கு தரப்படுமா என்பது சந்தேகமே. மதச்சாா்பற்ற வாக்குகளைப் பிரிக்க பா.ஜ.க.வினா் நிதிஷ்குமாரை பயன்படுத்திக் கொண்டனா். மேலும் பா.ஜ.க.வுடன் நிதிஷ் அதிக நெருக்கம் காட்டி வரும் சூழலில் முஸ்லிம்கள் அக்கட்சியினரை உதறிவிட்டனா் என்றுதான் சொல்ல வேண்டும். தில்லி தோ்தலில் ஜேடியு வெற்றி பெற முடியாத நிலையில், நிதிஷ்குமாரின் செல்வாக்கு என்ன என்பதை பா.ஜ.க.வினா் புரிந்து கொண்டுவிட்டனா். இந்தச் சூழ்நிலையில் பிகாா் தோ்தலில் ஜேடியுவுக்கு அதிக இடங்களைக் கொடுக்க பா.ஜ.க. முன்வராது என்பதே அரசியல் நோக்கா்களின் கருத்தாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT