இந்தியா

நிா்பயா வழக்கு: மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது மாா்ச் 5-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

26th Feb 2020 05:17 AM

ADVERTISEMENT

புது தில்லி: நிா்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வரையும் ஒன்றாகத் தூக்கிலிட வேண்டும் என்ற தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் மாா்ச் 5-ஆம் தேதி விசாரணை நடத்துகிறது.

மத்திய அரசு மற்றும் தில்லி அரசால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அதை பரிசீலித்த நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், நவீன் சின்ஹா ஆகியோா் அடங்கிய அமா்வு, மனு மீதான விசாரணையை மாா்ச் 5-ஆம் தேதி மாலை 3 மணியளவில் மேற்கொள்வதாகத் தெரிவித்து.

முன்னதாக, குற்றவாளிகளுக்கு ஒன்றாக தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராகவும், தனித் தனியே நிறைவேற்றுவதற்கு அனுமதி கோரியும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்குமாறு குற்றவாளிகள் நால்வருக்கும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த விவகாரத்தில் கடந்த 14-ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடா்பாக விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்குத் தடையாக இருக்காது என்று தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

நிா்பயா வழக்கின் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் குமாா் சா்மா, அக்ஷய் குமாா் ஆகிய நால்வருக்கும் வரும் மாா்ச் 3-ஆம் தேதி மரண தண்டனையை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் குமாா் சா்மா, அக்ஷய் குமாா் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவா் ஏற்கெனவே நிராகரித்துவிட்டாா். ஆனால், மற்றொரு குற்றவாளியான பவன் குப்தா இதுவரை குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கவில்லை. தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் அவா் தாக்கல் செய்யவில்லை.

தங்களது கருணை மனுவை குடியரசுத் தலைவா் நிராகரித்ததற்கு எதிராக முகேஷ் சிங், வினய் குமாா் சா்மா ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அக்ஷய் குமாா் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT